புதுச்சேரியில் வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஏ.வி.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.வி.சுப்பிரமணியன் புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இன்று(மார்ச்-5) மாலை வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
தொடர்ந்து ஏ.வி.சுப்பிரமணியன் புதுச்சேரி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முதல்வர் நாராயணசாமி, கட்சியின் முன்னாள் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி மற்றும் எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ஏ.வி.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முன்பு இருந்த கட்சி தலைவர் நமச்சிவாயம், அமைச்சர், எம்எல்ஏ, கட்சித் தலைவர் ஆகிய 3 பதவிகளை வகித்து வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் ஒரு பதவி மட்டும்தான் வகிக்க வேண்டும் என்ற கொள்கை உள்ளது. அதன் அடிப்படையில்தான் நமச்சிவாயம் வகித்து வந்த தலைவர் பதவி தற்போது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முன்பு ஏழரை ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துள்ளேன்.
அப்போது நான் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உரிய பதவியை வாங்கிக் கொடுத்துள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய பாஜக அரசும், புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடியும் தடையாக இருந்து வருகின்றனர். இதையும் எதிர்த்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்க ஆளுநர் அனுமதி வழங்காததால் முதல்வர் நாராயணசாமி 31 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தினார். அதன் பின்னர் தான் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அனுமதி வழங்கினார். புதுச்சேரியில் வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.