தமிழகம்

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: தேக்கடிக்கு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது

என்.கணேஷ்ராஜ்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேக்கடிக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாய் குறைந்தது. பலரும் தொடர்ந்து தங்களது பயண முன்பதிவுகளை ரத்து செய்து வருவதால் சுற்றுலாத் தொழில் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் முக்கிய சுற்றுலா மையங்களில் தேக்கடியும் ஒன்று. இங்கு முல்லைப் பெரியாறு அணை நீர்தேக்கத்தில் அமைந்துள்ள படகுகுழாம் மூலம் சுற்றுலாப் பயணிகள் படகுசவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

வனப்பகுதியில் இருந்து அணைப்பகுதிக்கு நீர் அருந்த வரும் யானை, காட்டெருமை, புலி, மான் உள்ளிட்ட பல விலங்குகளைப் படகில் இருந்தபடியே பார்க்க முடியும்.

இதற்காக இங்கு படகுகள் தினமும் காலை 7.30,9.30,11.15,1.45 மற்றும் 3.30 என்று 5 முறை இயக்கப்படுகின்றன.

இதுதவிர மலையேற்றம், பசுமை நடை, ஜீப் மற்றும் யானை சவாரி, கேரளா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் களரி, கதகளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதனால் உலகச் சுற்றுலாப் பயணிகளை தேக்கடி மிகவும் கவர்ந்து வருகிறது.

இங்கு மிதமான வெப்ப சீசனில் வெளிநாட்டு மற்றும் வடநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் பல நாடுகளில் உள்ளது. இந்தியாவில் கரானோ வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த வாரம் மட்டும் தேக்கடிக்கு வர இருந்த இத்தாலி, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்களது முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.

மேலும் பலர் தங்கள் பயணத்தை ஒத்திவைத்துள்ளனர். இதனால் தேக்கடியில் சுற்றுலா தொழில்கள் களை இழந்துள்ளன.

இது குறித்து கேரளா சுற்றுலா மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தேக்கடியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நம்பி ஏராளமான தொழில்கள் உள்ளன. ஓட்டல், விடுதி, கார், கைடு, சுற்றுலா ஏஜன்ட் உள்ளிட்ட பல தொழில்கள் இவர்களை நம்பியே உள்ளன.

குறிப்பாக இத்தாலியைச் சேர்ந்தவர்கள் யானை சவாரி, மலையேற்றத்திற்காகவே இங்கு வருவர்.

தேக்கடியைச் சுற்றிப்பார்த்து விட்டு பலரும் காரிலே வாகமன், மூணாறு, ராமக்கல்மெட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செல்வர். இதனால் இந்த சீசனில் இப்பகுதியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்பினால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாய் குறைந்துவிட்டது. பலரும் தங்களது முன்பதிவை ரத்து செய்து வருகின்றனர்" என்றனர்.

SCROLL FOR NEXT