புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில், துணைநிலை ஆளுநர் உத்தரவை எதிர்த்து உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 மே மாதம் முதல் காலியாக இருந்த புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை நியமித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டது.
மாநில தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாசை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் வகையில், தகுதி நிபந்தனைகளில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றங்கள் செய்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், யூனியன் பிரதேச சட்டப்படி மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுlருக்கே உள்ளதாகவும், மத்திய அரசின் உத்தரவுகளை அமைச்சர்களும், ஆளுநரும் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும் வாதிட்டார்.
துணைநிலை ஆளுநர் தரப்பில், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம், நிர்வாக கட்டுப்பாடுகளை குடியரசு தலைவருக்கு வழங்கியிருக்கிறது என்றும், குடியரசு தலைவர் அந்த அதிகாரங்களை துணைநிலை ஆளுனருக்கு வழங்கியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் அதிகாரத்திற்கு மேல் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நிர்வாக அறிவுறுத்தல்களை எதிர்த்து மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்கினர், அதில் துணைநிலை ஆளுநர் உத்தரவை எதிர்த்து உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று துணைநிலை ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு செல்லும் என உத்தரவிட்டனர்.