"இந்தியாவிற்கும், மங்கோலியாவிற்கும் நீண்டகால வரலாற்று, கலாச்சார உறவு உள்ளது. மங்கோலிய குழந்தைகளுக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படுகிறது" என மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு வந்த மங்கோலிய தூதுவர் ஜி.கான்போல்ட் தெரிவித்தார்.
புது டெல்லியிலுள்ள மங்கோலிய நாட்டின் தூதுவர் ஜி.கான்போல்ட், தனது மனைவி மாஷாவுடன் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்துக்கு வந்தார்.
அவரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலாளர் க.மு.நடராஜன், இயக்குநர் கே.ஆர்.நந்தா ராவ், செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மங்கோலிய நாட்டின் தூதுவரும், அவரது மனைவியும் சுமார் 1 மணி நேரம் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து மங்கோலிய தூதுவர் ஜி.கான்போல்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைதி, நேர்மை, அகிம்சையை வலியுறுத்திய மகாத்மா காந்தியை இந்த நினைவு அருங்காட்சியகம் அனைவருக்கும் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது.
காந்திஜியை மங்கோலிய மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அங்குள்ள தெருக்களுக்கு காந்திஜியின் பெயரும், மங்கோலிய மக்கள் காந்தியின் பெயரை தங்களது குழந்தைகளுக்கும் வைக்கின்றனர்.
காந்திஜியின் சிலையும் அங்குள்ளது. புத்தர் அமைதி, நாட்டு சுதந்திரத்தை விரும்பினார். அதை நிலைநாட்டவே மங்கோலிய மக்களும் விரும்புகின்றனர்.
இந்தியா மற்றும் மங்கோலியாவிற்கு 10வது நூற்றாண்டு முதல் நீண்டகாலமாக வரலாற்று, ஆன்மிக, கலாச்சார உறவுகள் உள்ளது. காந்தியின் 150-வது ஆண்டை முன்னிட்டு காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் மங்கோலியாவிற்கு வந்தபோது மங்கோலியாவிற்கு புத்தர் சிலையை பரிசாக வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி ஆன்மிகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடந்தாண்டு மங்கோலியாவிற்கு புத்தர் சிலை வழங்கப்பட்டது.
தமிழ் கலாச்சாரம் சிறந்த பழமையான நாகரிகம் கொண்டது. தமிழகக் குழந்தைகள், இளைஞர்களின் கலாச்சாரம் பாரம்பரியமிக்கதாக உள்ளது என்றார்.