சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர் செயல்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த விமலீஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அதிமுகவை சேர்ந்த என் தாயார் சாந்தி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் இரு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 4-ல் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 3-ம் தேதி காலையில் என் தாயார் உறவினரை சந்திப்பதற்காக பஸ்சில் கம்பம் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் என் தாயார் பங்கேற்பதை தடுக்கும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள் அவரை கடத்தியுள்ளனர். தேர்தலில் என் தாயார் பங்கேற்காமல் போனதால் எதிரணியை (திமுக) சேர்ந்தவர் தலைவராக தேர்வு செய்ப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் திட்டமிட்டு என் தாயாரை கடத்தியுள்ளனர்.
இதனால் என் தாயார் மீட்கப்படும் வரை சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்கவும், தேர்தலில் என் தாயார் பங்கேற்பதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவர், துணைத் தலைவர் (திமுகவை சேர்ந்தவர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரரின் தாயார் கடத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல நடத்தப்பட்டிருப்பதால், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் செயல்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மனு தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், போடி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.