கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். கட்சிக்கொடி, பெயர் என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் இரண்டு பெரிய ஆளுமைகளான திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு, ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து டிச.31 2017-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்தார். 1996-ம் ஆண்டு அரசியலில் வாய்ஸ் கொடுத்த ரஜினி 2017-ம் ஆண்டு இறுதியில் இவ்வாறு அறிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் எம்ஜிஆர் சிலைத்திறப்பு விழாவில் பேசிய ரஜினி இருபெரும் ஆளுமைகள் இல்லை, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது அதை நான் நிரப்புவேன் என்று பேசி தமிழகத்தில் என் தலைமையில் எம்ஜிஆர் ஆட்சியைக் கொண்டுவருவேன் என்று பேசினார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் அமைக்கப்பட்டது. ஆன்மிக அரசியல்தான் என் ஆரசியல் என ரஜினி பிரகடனப்படுத்த அது ஒரு சர்ச்சையானது.
இந்நிலையில் 2021- சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி நேரிடையாக போட்டியிடும் என ரஜினி ஏற்கெனவே அறிவித்தப்படி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கட்சி தொடங்குகிறார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த ரஜினி இன்று மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி, சின்னம், கட்சி அணிகளை அமைப்பது, தேர்தலில் ஈடுபடுவதற்கான யுக்தி உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.