நாட்டில் உள்ள 736 அணைகள் ஒரு பில்லியன் டாலரில் 10 ஆண்டுகளில் புனரமைக்கப்படவுள்ளதாக மத்திய நீர் ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன் ராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் உதகையில் அவசர கால திட்டம் குறித்த பங்குதாரர்களின் ஒரு நாள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்துப் பேசும்போது, ''தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் புனல்மின் நிலையங்கள் மூலமாக சுமார் 2300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா மற்றும் பைக்காரா படுகைகளில் மட்டும் 850 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிறுவுதிறன் அமையப் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா படுகையில் அமைந்துள்ள போர்த்தி மந்து, அவிலாஞ்சி, எமரால்டு, குந்தா பாலம் மற்றும் பெகும்பகல்லா அணைகளிலிருந்து அதிகப்படியான வெள்ளம் ஏற்படும் அவசர காலத்தில் அணையின் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவசரக் காலங்களில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை போன்ற பல்வேறு துறைகள் இணைந்து தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்'' என்றார்.
தமிழ்நாடு மின்சார வாரிய (உற்பத்தி) இயக்குநர் எத்திராஜ் பேசும்போது, ''மத்திய அரசின் நீர் ஆணையம் உலக வங்கியிலிருந்து கடன் பெற்று இந்தியாவில் இருக்கும் அணைகள் அனைத்தையும் புனரமைப்பு செய்ய அணை மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டத்தை நிலங்களின் பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை மூலமாக செயல்படுத்தி வருகிறது. இதில் மின்துறையின் 20 அணைகளில் முதல் கட்ட சீரமைப்பு புனரமைப்பு பணிகள் 2014-2020 வரை நடைபெற்றன. அவற்றுள் 9 அணைகள் நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ளன.
தமிழகத்தில் அணை மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் முதல்கட்டத்தில் 69 அணைகளில் 20 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 27 அணைகள் புனரமைக்கபடவுள்ளன. 2020-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரை இந்த அணைகள் புனரமைக்கப்படும். புனரமைப்பு முடிந்த அணைகளில் அவசர நடவடிக்கை திட்டம், அணைகளைச் சார்ந்த அனைத்து துறையினர் மற்றும் பாதிக்கப்பட கூடிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விளக்கப்பட வேண்டுமென்பது ஒரு முக்கியப் பணியாகும்.
அதன்படி போர்த்திமந்து ஒருங்கிணைந்த அவிலாஞ்சி-எமரால்டு, குந்தா பாலம் மற்றும் பெகும்பள்ளா ஆகிய ஐந்து அணைகளுக்கு அதிகப்படியான நீர் வெளியேற்றம், உடைப்பு காரணமாக நீரில் மூழ்கும் பகுதிகளின் வரைபடம் தயாரிக்கப்பட்டு அவசரகால நடவடிக்கைகள் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது'' என்றார்.
மத்திய நீர் ஆணையத்தின் தலைமை பொறியாளர் குல்ஷன் ராஜ் பேசும்போது, ''நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை மத்திய நீர் ஆணையம் உறுதி செய்து வருகிறது. 1990 முதல் அணை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5,700 அணைகள் உள்ளன. தற்போத 411 புதிய அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. 2012-ம் ஆண்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உட்பட 9 மாநிலங்களில் உள்ள 223 அணைகள் புனரமைக்கப்பட்டன. இந்நிலையில், உலக வங்கி நிதியுதவியுடன் வரும் ஜூன் மாதம் முதல் 19 மாநிலங்களில் உள்ள 736 அணைகள் ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளன. 10 ஆண்டுகளில் இப்பணிகள் நடக்கவுள்ளன'' என்றார்.
இக்கூட்டத்தில், உலக வங்கி அதிகாரி டாக்டர் அஜித்குமார் பட்நாயக், இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர் அமுதா, இந்தியப் புவியியல் மைய இயக்குநர் கே.அரவிந்த், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலர்கள், மத்திய, மாநில அரசுத்துறை அலுவலர்கள், உலக வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.