தேனாம்பேட்டை குண்டுவீச்சு சம்பவத்தில் காரை வட்டமிடும் ரவுடிகள், அவர்களிடம் சிக்காமல் செல்லும் கார், ஒரு இடத்தில் ரவுடி கும்பல் மோட்டார் சைக்கிளில் காரைச் சுற்றி நிற்பது, பின்னர் காரில் தாதாக்கள் தப்பித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் முக்கியமான பாதுகாப்பு மிக்க இடம் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியாகும். இந்தப் பகுதியில் நேற்று இரண்டு ரவுடிகள் கூட்டத்தினரிடையே சேஸிங் சம்பவம் நடந்தது.
தாதாக்கள் இருவரைக் கொல்வதற்காக ரவுடிகள் ஒரு கும்பலாக வந்தனர். தாதாக்கள் பயணித்த கார் மீது பெட்ரோல் ரவுடி கும்பல் பாம் வீசும்போது அது தவறி தரையில் விழுந்தது. இதன் மீது பொதுமக்கள் கவனம் திரும்பியதால் துரத்தல் சம்பவம் முடிவுக்கு வந்தது.
நீதிமன்ற வழக்குக்காக பிரபல வடசென்னை ரவுடியும், தென் சென்னை ரவுடியும் காரில் வந்தனர். அப்போது அவர்களை தென்மாவட்ட பிரபல தாதாவின் ஆட்கள் 8 மோட்டார் சைக்கிள்களில் சுற்று போட்டுள்ளனர். இதனால் காரில் வந்த தாதாக்கள் மிரண்டு போயினர். காருடன் தப்பிக்க தாதாக்கள் வேகமாகச் செல்ல முயன்றனர். டிராபிக்கில் அவர்களால் விரைவாகச் செல்ல முடியவில்லை.
பாம் வீச்சு சம்பவத்தில் காரில் வந்த தாதாக்கள் தப்பிச் சென்றுவிட்டாலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தும் ரவுடிகளிடமிருந்து தப்பிப்பதற்கு முன் போராடும் திக் திக் நிமிடக் காணொலியை போலீஸார் எடுத்துள்ளனர். அதில் கார் வேகமாக வந்து வாகன நெரிசலில் நிற்கிறது. துரத்தி வரும் ஆட்கள் காரைச் சுற்றி ஆங்காங்கே நிற்கின்றனர். சுற்றிலும் பொதுமக்கள், வாகனங்கள் இருப்பதால் ரவுடிகள் தனி இடம் பார்த்து உடன் செல்கின்றனர். இந்தக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதனிடையே கிட்டத்தட்ட ரவுடிகள் அனைவரின் பட்டியலையும் போலீஸார் எடுத்துவிட்டனர். தென்மாவட்ட அரசியல் புள்ளியின் கீழ் இயங்கும் ஒரு தாதாவின் ஸ்கெட்ச்படி மூன்று முக்கிய ரவுடிகள் வழிகாட்டுதலில் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.