தமிழகம்

திருவள்ளூரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு அரசு பஸ்களை இயக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு அரசு பஸ்களை இயக்கவேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக தலைநகர் சென்னை யை ஒட்டி அமைந்துள்ள மாவட்டம் திருவள்ளூர். இம்மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் இருந்து முக்கிய நகரங் களுக்கு அரசு பஸ்கள் இயக்கப் படுவதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, ‘தி இந்து-உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட திருவள்ளூரைச் சேர்ந்த பாஸ்கர் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர், திருமழிசை, கும்மிடிப்பூண்டி, காக்களூர், ஆர்.கே.பேட்டை, விச்சூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். இங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், பிற மாவட்ட மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

ஆனால், திருவள்ளூரில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர் உட்பட முக்கிய நகரங்களுக்கு செல்ல, 40 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை கோயம்பேடுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, திருவள்ளூரில் இருந்து பல நகரங்களுக்கும் செல்ல பஸ்களை இயக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: திருவள்ளூரில் இருந்து திருப்பதி, பெங்களூரூ, திருத்தணி, திருச்சி, புதுச்சேரி, வேலூர், திருவண் ணாமலை, ஆரணி ஆகிய முக்கிய நகரங்களுக்கு பஸ்களை இயக்கி வருகிறோம். ஆனால், திருத்தணியைத் தவிர்த்து மற்ற நகரங்களுக்கு செல்லும் பஸ்களில் மிக சொற்ப அளவில்தான் மக்கள் பயணிக்கின்றனர்.

இதனால், திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் பஸ்களை திருவள்ளூரில் இருந்து கோயம்பேடு வரை இயக்கி, பிறகு அங்கிருந்து, மற்ற நகரங்களுக்கு இயக்கவேண்டியுள்ளது. சென்னை-திருவள்ளூர்-அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் வசதி இருப்பதால், அதில் பயணம் செய்யவே பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

எதிர் காலத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், திருவள்ளூரில் இருந்து, பிற நகரங்களுக்கு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT