சிவகாசி நிருபர் கார்த்தி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வாரப் பத்திரிகை நிருபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் நேற்று இரவு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
வார இதழ் ஒன்றில் வெளியான சிவகாசி நிருபர் எழுதிய செய்திக் கட்டுரையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ரஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் இடையே உட்கசிப் பூசல் நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சிவகாசி பாவாடி தோப்பு அருகே உள்ள பிரபல ஓட்டல் அருகே நிருபர் கார்த்தியை மர்ம நபர்கள் 4 பேர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த கார்த்தியைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் திரண்டபோது, தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
பின்னர், பலத்த காயத்துடன் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிருபர் கார்த்தி சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். தாக்குதல் நடத்தியது தொடர்பாக 2 நபர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிருபர் கார்த்தி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் தெரிவித்தார். அவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நிருபர் கார்த்தி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் தாக்குதலுக்குத் தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மற்றும் கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது.