ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது அதிமுக-திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தலா 8 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இரு கட்சிகளின் கூட்டணிக்கும் சமமாக பலம் இருந்ததால், கடந்த ஜனவரி 11 மற்றும் 30 ஆகிய தேதிகள் என இருமுறை மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 4) காலை மூன்றாவது முறையாக ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், திமுக-அதிமுகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது.
தேர்தல் நடைபெறும் அலுவலகத்திற்குள் திருத்தணி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மன் செல்ல முயன்றதால் அதனை திமுகவினர் தடுக்க முயன்றனர். இதனால் சிறிது பதற்றம் நிலவியது. சிறிது நேரத்தில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால் இரு கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இரு கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்று, அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
தேர்தல் முடிவில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் என, 9 பேரின் வாக்குகள் அதிமுக சார்பில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரஞ்சிதா பெற்றதால், அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனையடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.