வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட கைதி, மீண்டும் சிறைக்கு திரும்பும் வழியில் தப்பினார். மருதமலை சினிமா பட பாணியில் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு வருவதாக கூறியவர் தப்பியோடினார். அவரைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட 25-க்கும்மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்.
தற்போது, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குள் வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர். இந்த வழக்கின் விசாரணைக்காக மதுராந்தகம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் ராஜா, புஷ்பராணி ஆகியோர் துப்பாக்கியுடன் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை முடிந்த நிலையில் வெங்கடேசனை மீண்டும் வேலூர் சிறையில் அடைக்க அவர்கள் பேருந்தில் புறப்பட்டனர். காஞ்சிபுரம் வந்ததும் பெண் காவலர் புஷ்பராணியை துப்பாக்கியுடன் வீட்டுக்கு செல்லுமாறு கூறிய காவலர் ராஜா, வாடகை கார் மூலம் வேலூர் சிறையில் வெங்கடேசனை பாதுகாப்புடன் தானே ஒப்படைத்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
வீட்டில் சாப்பிட அனுமதி
பின்னர், காரில் இருவரும் வேலூர் நோக்கி புறப்பட்டனர். வழியில், வாலாஜா அடுத்த செங்காட்டில் உள்ள வீட்டுக்குச் சென்று இரவு சாப்பாடு சாப்பிட்டுச் செல்லவெங்கடேசனுக்கு காவலர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, சாப்பிட்டு வருவதாக வீட்டுக்குள் சென்ற வெங்கடேசன், பின்வாசல் வழியாக தப்பியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் காவலர் ராஜா, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது காணவில்லை. மருதமலை சினிமா படம் பாணியில் தப்பிச் சென்ற வெங்கடேசனால் காவலர் ராஜா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், காஞ்சிபுரத்தில் உள்ள பெண் காவலர் புஷ்பராணியிடம் நடந்த விவரங்களை செல்போனில் தெரிவித்துள்ளார். மேலும், அவரை உடனடியாக வாலாஜாவுக்கு வரவழைத்துள்ளார். அங்கு, இருவரும் பேசிக்கொண்டபடி வாலாஜா காவல் நிலையத்துக்கு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்றனர். விசாரணைக் கைதியான வெங்கடேசனுடன் பேருந்தில் வேலூர் சிறைக்கு திரும்பும்போது வாலாஜா சுங்கச்சாவடி அருகே தங்களை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதாக புகார் அளித்தனர்.
5 தனிப்படை அமைப்பு
இதுதொடர்பாக ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீதா, காவலர்கள் ராஜா மற்றும் புஷ்பராணி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தீவிர விசாரணைநடத்தியதில், வெங்கடேசனின் வீட்டில் இருந்து தப்பிச் சென்றதைஇருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, தப்பியோடிய வெங்கடேசனை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட காவலர்கள் இருவரிடமும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.