தமிழக சுகாதார சீரமைப்புத் திட்ட தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், இத்திட்டத்தின் முதல்கட்ட தொகைக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்குகிறார் இந்தியாவுக்கான உலக வங்கியின் இயக்குநர் ஜுனைத் கமால் அஹமத். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

கோவிட் - 19 வைரஸுக்கு தமிழகத்தில் மருந்து கண்டுபிடியுங்கள்: மருத்துவ நிபுணர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் என்று தமிழக மருத்துவ நிபுணர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக வங்கி உதவியுடன் ரூ.2,857 கோடி மதிப்பிலான தமிழக சுகாதார சீரமைப்புத் திட்டம் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி, திட்டத்தை தொடங்கி வைத்து,திட்ட ஆவணத்தை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவத்துக்கு 67 ஆகவும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தை பிறப்புக்கு 16 ஆகவும் உள்ளது. தேசிய அளவில் முறையே 122 மற்றும் 30 ஆக உள்ளதைவிட தமிழகத்தில் இவ்விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 30 ஆகக் குறைப்பதே அரசின் நோக்கம்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், ரூ.3 ஆயிரத்து 995 கோடி மதிப்பீட்டில் நிறுவ, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று அந்தமருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் மக்களிடையே தொற்றுநோய் அதிகமாக இருந்த நிலைமாறி, தற்போது தொற்றா நோய்அதிகமாக உள்ளது. புதிய, புதியநோய்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கரோனா வைரஸுக்கு (கோவிட்-19) மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் அதற்கான மருந்தைக் கண்டுபிடித்து, இந்த நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தமிழக மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தி, உலகத் தரத்துடன் வழங்கும் பொருட்டு, உலக வங்கியின் துணையுடன் சுகாதாரசீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான உலக வங்கியின் பங்கு ரூ.1,999.90 கோடி ஆகும். தமிழக அரசு ரூ.857.101 கோடியை முதலீடு செய்கிறது.

உயர்தர சிகிச்சை

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் மேம்படுத்தப்பட்ட தரமான சிகிச்சை, தொற்றா நோய்கள் மற்றும் காயங்களுக்கான மேம்படுத்தப்பட்ட மேலாண்மை, பேறுசார் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்குதல் ஆகியனவாகும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராகஅனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். இதனால், பொதுமக்கள் உயர்தர சிகிச்சைகளைத் தடையின்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், “சுகாதாரத்தில் தமிழகம் முதல் மாநிலமாக மட்டுமல்லாமல், முன்னோடி மாநிலமாகவும் உள்ளது. உலக வங்கி மிகச் சிறந்த ஒத்துழைப்பை தமிழகத்துக்கு வழங்கிவருகிறது. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவத்தை தருவது, குழந்தைகளைப் பாதுகாப்பது, மனநிலை பாதிப்புக்குஆலோசனை வழங்குவது, ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவது போன்ற மருத்துவ சேவைகள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும்" என்றார்.

இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் கமால்அஹமத் பேசும்போது, “தொற்றாநோய்கள் பாதிப்பு தமிழகத்துக்கு ஒரு சவாலாக உள்ளது. அனைவருக்கும் தரமான மருத்துவம்,தொற்றா நோய்களை எதிர்கொள்ளுதல் போன்றவைகளே தமிழக சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

இந்த விழாவில் தலைமைச் செயலர் க.சண்முகம், சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT