திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவில் பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், குழந்தைகளை கரும்புதொட்டிலில் தூக்கிவந்தும் அம்மனை வழிபட்டனர்.
திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா பிப்ரவரி 22-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. பிப்ரவரி 25-ம் தேதி கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் பல்வேறு சமுதாயத்தினர் மண்டகப்படி நடைபெற்றுவருகிறது.
இதில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பகலில் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் தினமும் குழுக்களாக முளைப்பாரி எடுத்துவந்தும், பால்குடம் எடுத்தும் அம்மனை வழிபட்டுவருகின்றனர். சிலர் குழந்தையை கரும்புதொட்டிலில் அமரவைத்து தூக்கிக்கொண்டு கோயிலைச் சுற்றி வலம்வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பெண்கள் தினமும் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு நீர் ஊற்றியும் வழிபட்டுவருகின்றனர். தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் கம்மங்கூல், நீர்மோர், தண்ணீர் என பக்தர்களுக்கு பலரும் வழங்கிவருகின்றனர்.
விழாவின் முக்கியநிகழ்வாக பக்தர்கள் பூக்குழி (தீ மிதித்தல்) இறங்கும் நிகழ்ச்சி மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்க கோயிலில் பதிவு செய்துள்ளனர்.
பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
மார்ச் 7-ம் தேதி தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மார்ச் 8-ம் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் மாலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. மார்ச் 9-ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், மார்ச் 10-ம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து வழிபட்டுசெல்கின்றனர்.
மாலை முதல் இரவு வரை கோயிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் ராட்டினங்கள், பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.