மஞ்சள், ஆரஞ்சு அம்புக்குறி குண்டுவீசித்தப்பிச்செல்லும் வாகன ஓட்டி, வட்டவடிவம் குண்டு வீசியதால் சாலையில் எழுந்த புகை மண்டலம். 
தமிழகம்

ஜெமினி மேம்பாலம் அருகே கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு:  மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களுக்கு போலீஸ் வலை

செய்திப்பிரிவு

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் சென்ற கார் ஒன்றின்மீது நாட்டு வெடிகுண்டை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீச அது தரையில் விழுந்து வெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் இரண்டாவது சம்பவமாக தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே ஜெமினி பாலம் இறக்கத்தில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன.

அப்போது ஆயிரம் விளக்கிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி ஜெமினி பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சாலையில் நடுவில் தடுப்பை ஒட்டி இறங்க அந்த நேரம் சாலையில் அந்தப்பக்கம் ஜெமினி பாலத்திலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையம் நோக்கி தவறான பாதையில் கார் ஒன்று கடந்தது.

அந்தக்காரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர் சாலையின் இந்தப்புறம் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீச இரண்டும் காரின்மீது படவில்லை. அதே நேரம் கார் திடீரென வலதுபுறம் திரும்பி ஜி.என்.செட்டி சாலை நோக்கி வேகமாக செல்ல வெடிகுண்டை வீசியவர்கள் சாவகாசமாக தேனாம்பேட்டை நோக்கி சென்றுள்ளனர்.

வெடிகுண்டு வெடித்த சத்தத்தைக் கேட்டு சிலர் அருகிலிருந்த தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஓடிச் சென்று சொல்ல இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் உதவி ஆணையர் வெளியே வந்துபார்த்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் தரையில் விழுந்து வெடித்தாலும் அதனால் வாகன ஓட்டிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எந்த கார்மீது குண்டு வீசினார்களோ அந்தக்காரும் தப்பிச் சென்றுவிட்டது. காரை துரத்திக்கொண்டு வந்தவர்கள் காரில் உள்ளவர்கள்மீது வெடிகுண்டு வீசி கொல்லும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். அண்ணா சாலையில் அதுவும் தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் வந்து தடயங்களை சேகரித்தார். காவல் ஆணையருக்கு அவர் சில விளக்கங்களை அளித்தார்.

இந்நிலையில் வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து அறிய தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகில் சில இடங்களில் போலீஸார் நிறுவிய சிசிடிவி கேமாராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது அது வேலை செய்யாதது தெரிய வந்தது.

உதவி ஆணையர், ஆய்வாளர் இருக்கும் காவல் நிலையம் அருகில் பொறுத்தப்பட்ட கேமராவே வேலை செய்யாததால் அருகிலிருந்த வணிக நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுக்கு எடுத்ததில் மேற்கண்ட காட்சி தெளிவாக படமாகியிருந்தது.

நாட்டு வெடிகுண்டை துணிச்சலாக வீசியவர்கள் யார் என போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கு முன் சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை அருகே தோட்டம் சேகர் என்கிற மறைந்த ரவுடியின் மகன் அழகுராஜா என்பவர் தனது தாயாருடன் எழும்பூர் கோர்ட்டுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வரும்போது அவரை வெட்ட சிலர் வர அவர் ஆட்டோவிலிருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வீசினார்.

இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவரை கைது செய்த போலீஸார் நாட்டுவெடிகுண்டு தயார் செய்துக் கொடுத்த நபரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அழகுராஜாவும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இவர்கள் யாருக்காவது இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்குமா? அல்லது நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொடுத்த நபரே வேறு யாருக்காவது கொடுத்துள்ளாரா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கும் பெட்ரோல் குண்டு, நாட்டு வெடிகுண்டுக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்தே வந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்டேஷன் மீது பெட்ரோல் பாம் வீசப்பட்டது, அதில் தாமஸ் சாலையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டன்ர்.

அதேப்போன்று கடந்த மாதம் 20-ம் தேதி காதலியின்மீதுள்ள கோபத்தில் தேனாம்பேட்டை போலீஸ் பூத் மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் பாம் அடித்தார் , தற்போது ஸ்டேஷனுக்கு அருகில் கார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT