இனி இதுபோன்ற விபத்துகள் நேராமல் இருக்க, காவல்துறை பரிந்துரை ஏதாவது இருந்தால் தெரிவிக்கலாம். அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என சிசிபி போலீஸ் விசாரணைக்குப் பின் கமல் தெரிவித்தார்.
சென்னை பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் 'ஈவிபி பிலிம்சிட்டி'யில், கமல்ஹாசன் நடித்துவரும் 'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த 19-ம் தேதி இரவு நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்து தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளில் லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், ஆபரேட்டர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் சங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சங்கர் ஏற்கெனவே ஆஜராகிவிட்டார், கமல் இன்று ஆஜரானார். 3 மணி நேர விசாரணைக்குப் பின் கமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“சகோதரர்களுக்கு நான் சொல்லும் கடமையாக இங்கே காவல்துறையில் எனக்குத் தெரிந்த விவரங்களை எடுத்துச் சொல்வதற்கும், எங்கள் துறையில் இதுபோன்ற விபத்துகள் இனி நிகழக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சியின் முதல் கட்ட முயற்சியாகவே இந்தச் சந்திப்பைக் கருதுகிறேன்.
நேற்று திரையுலகைச் சார்ந்தவர்கள் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் அனைவரிடமும் இதுகுறித்துப் பேசினேன்.
இனி இதுபோன்று நடக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் ஏதாவது பரிந்துரைகள் இருப்பின் தெரிவிக்கலாம். அதையும் நாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளோம். கூடிய விரைவில் எங்கள் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் சந்திக்க இருக்கிறோம். அது குறித்த விவரங்களை நான் உங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்வேன்”.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.