சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(29). 2013-ம் ஆண்டு காவலராகத் தேர்வான இவர், கோவை புதூர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4-ம் அணியில் இருந்து வந்தார். 2018 அக்டோபரில் சிவகங்கை மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் பணம் பாதுகாப்பு அறைக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். மேல் தளத்தில் வங்கியும், சுரங்கத்தில் (அண்டர் கிரவுண்ட்) பணம் பாதுகாப்பு அறையும் உள்ளன. இங்கிருந்து தான் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு பணம் அனுப்பப்படும்.
உள்பக்கமாக பூட்டப்பட்ட அறை
பணம் பாதுகாப்பு அறையைபாதுகாக்க ஷிப்ட் முறையில்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு யோகேஸ்வரன் பணியில் இருந்தார். சகஊழியர் நேற்று காலை வந்தபோது, பாதுகாப்புப்பணியில் இருந்த யோகேஸ்வரனைக் காணவில்லை. தேடிப்பார்த்தபோது ஓய்வறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
திருப்பத்தூர் டவுன் போலீஸார் உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தபோது, யோகேஸ்வரன் பாதுகாப்புப் பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு இறந்து கிடந்தார். மேலும் அவர் சீருடை அணியாமல் லுங்கி அணிந்திருந்தார்.
அதிர்ந்து கூடப் பேசாதவர்
விவசாய குடும்பத்தில் பிறந்த யோகேஸ்வரன் சற்றும் அதிர்ந்துகூடப் பேசாதவர் என்றும், திருமணத்துக்காக அவருக்கு பெண் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது, உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு பிரச்சினை ஏதேனும் இருக்குமா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.