கேன் குடிநீர் உற்பத்தியாளர்களை அரசு நேற்று அழைத்துப் பேசாததால், அவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக நீடிக்கிறது. கேன் குடிநீர் ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகம் முழுவதும் மேற்படி உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகள் தொடர்ந்து ‘சீல்’ வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது.
தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ராஜசேகரன் கூறும்போது, ‘‘தமிழக பொதுப்பணித் துறை செயலாளரை சந்திக்கும்படி அரசு தரப்பில் கூறினர்.
அதன்படி, எங்களது சங்கத்தினர், சென்னை மற்றும் கோவையில் செயல்படும் சங்கங்களின் பிரதிநிதி கள் சென்னையில் நேற்று அரசு அழைப்புக்காக காத்திருந்தனர். நேற்றிரவு வரை அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில், கேன்குடிநீர் ஆலைகளுக்கான உரிமம்தொடர்பான வழக்கு சென்னைஉயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் என தெரியவருகிறது. எங்கள் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவிருப்பதால், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.