திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுமி நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, 16 வயது சிறுவனை கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தியிடம், சிறுமியின் தாயார் புகார்மனு ஒன்று அளித்தார். அம்மனுவில், “எனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு தச்சம்பட்டு காவல் நிலையத்துக்கு மகளுடன் கடந்த 1-ம் தேதி சென்றேன். அப்போது, அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், நான் கதை சொல்வதாகக் கூறி என்னை திட்டினார். பின்னர், அங்கு வந்த காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவர் தவறு செய்தவரின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பெற்றுக்கொண்டு சமாதானமாக செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறிய எனது உறவினர் மற்றும் கிராம மக்களை திட்டி மிரட்டினார்.
இதையடுத்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சிறுவனை கைது செய்தனர். எனது புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் கட்ட பஞ்சாயத்து செய்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளி மீது கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என கூறியுள்ளார்.
இம்மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.