தமிழகம்

மதுரை - சிவகங்கையில் தொடர் கைவரிசை காட்டி வந்த கொள்ளையர்கள் சென்னையில் கைது- வருமானவரித் துறை அதிகாரி உறவினர் வீட்டிலும் திருடியது அம்பலம்

செய்திப்பிரிவு

மதுரை, சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரி உறவினர் வீட்டிலும் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை புலனாய்வு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவரின் மனைவி பாரதி (37). இவர் நுங்கம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் அடையாறு சாஸ்திரி நகர், 5-வது அவென்யூவில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், அவர்கள் கடந்த 14-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர். இதை அறிந்துகொண்ட கொள்ளையர்கள் மறுநாள் அதிகாலை வீட்டின் பின்புறமாக நுழைந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள வைர நகை, 40 பவுன் தங்க நகைகள், விலை உயர்ந்த 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துத் தப்பினர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 17-ம் தேதி இரவு நீலாங்கரையில் வசித்து வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கேரி ஸ்டூவர்ட் என்பவரின் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்தனர். இதைக் கண்டு மற்றொரு அறையில் இருந்த கேரி ஸ்டூவர்ட் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். போலீஸாரின் வாகன சைரன் சத்தம் கேட்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை விட்டு கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி ஓடினர்.

அந்த இருசக்கர வாகனத்தை அடிப்படையாக வைத்தும், சென்னையில் உள்ள 75-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதன்படி, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம், காரியப்பட்டி தாலுகா, முஷ்டக்குறிச்சியைச் சேர்ந்த வன்னி கருப்பு (27), அவரது கூட்டாளி மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த சுரேந்திரன் என்ற ராஜ் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளன. சென்னையிலும் கைவரிசை காட்டியுள்ள அவர்களைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

இதற்கிடையே சிறப்பாக விசாரணை செய்த அடையாறு துணை ஆணையர் பகலவன், உதவி ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.

SCROLL FOR NEXT