தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மார்ச் 20-ல் வெளியிட மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி சார்பில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மார்ச் 20-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில்ஆண், பெண் என இரு பாலருக்குமான 5 ஆயிரத்து 489 வாக்குச்சாவடிகள், ஆண் வாக்காளர்களுக்கு மட்டும் 135 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்கு மட்டும் 135 வாக்குச்சாவடிகள் எனமொத்தம் 5 ஆயிரத்து 759 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க ஏதுவாக அனைத்து வார்டுஅலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெறும் வகையில் உள்ளூர் பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ரிப்பன்மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி துணை ஆணையர் பி.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர், உரிய ஆய்வை மேற்கொண்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வரும் 6-ம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக வரைவு வாக்குச்சாவடி தொடர்பாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இறுதி வாக்குச்சாவடி பட்டியலை ஆதாரமாக கொண்டு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் கடந்த மாதம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்கள் அடிப்படையில், வார்டுவாரியாக உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்தயார் செய்யும் பணியை 19-ம் தேதிக்குள் முடிக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து 20-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல்வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.தர், வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT