தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி இளங்கோவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான காமராஜர் அரங்கத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் இளங்கோவன் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீர் பயணமாக இளங்கோவன் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய இளங்கோவன், ‘‘கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே திட்டமிருந்தபடி டெல்லி வந்துள்ளதாக’’ தெரிவித்தார்.