நாடக நடிகர்களின் கோரிக்கைகைளை வலியுறுத்தி, நாடக நடிகர் ஒருவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு அரிச்சந்திர மகாராஜா வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
மதுரை வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நாடக நடிகர் கலைமாமணி எம்எஸ்பி.கலைமணி(71. இவர் மன்னர் அரிச்சந்திரன் வேடத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "55 ஆண்டாக இசை நாடக நடிகராக இருந்து வருகிறேன். தற்போது நாடக நடிகர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இரவு 10 மணி வரையே மதுரையில் நாடகம் நடித்த அனுமதிக்கப்படுகிறது.
இதை அதிகாலை 2 மணி வரை நீட்டிக்க வேண்டும். கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்களுக்கு இலவச அரசு பேருந்து பயண அனுமதி வழங்க வேண்டும்,
நலிந்த கலைஞர்களுக்கு முதல்வர் உயர்த்தி அறிவித்த ஓய்வூதியம் ரூ.3,000-ம், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 5,000 வழங்க வேண்டும்,
நாடக நடிகர்களுக்கு அரசு இலவச தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தேன்.
வித்தியாசமாக வந்தால்தான் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதற்காக 56 தேசத்தை ஆண்டவரும், உண்மை, சத்தியத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவருமான அரிச்சந்திர மகாராஜா வேடத்தில் வந்தேன்" எனத் தெரிவித்தார்.