நியமன எம்.பி. பதவியை இஸ்லாமியருக்கு வழங்குவது குறித்து முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் பேசும்போது "விருதுநகரில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி பணிகள் இன்றே தொடங்கிவிட்டன. ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மருத்துவக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார்.
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் வராது. பாதிப்பு வந்தால் முதல் ஆளாக முதல்வர் பழனிசாமி அதைத் தடுப்பார். முதல்வர் சொன்ன வாக்கை மீற மாட்டார்.
அதிமுக இஸ்லாமியர்களுக்கு விரோதமான கட்சி கிடையாது. இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு, சண்டை இழுத்து, தெருவில் இழுத்து விட்டது திமுக. மாறாக, அதிமுக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இயக்கம்.
இஸ்லாமியர்களை அழைத்துப் பேச தேவையான நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி எடுப்பார். கைக்குழந்தையுடன் இஸ்லாமியப் பெண்கள் போராடுவதைப் பார்த்து தமிழக முதல்வர் வேதனைப்படுகிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஒற்றுமையாக வாழ வகை செய்யும் நல்ல தலைவனாக முதல்வர் இருப்பார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தால் நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இரட்டை இலை தான் வெல்லும். நியமன எம்.பி. பதவிக்கு இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
ரஜினியுடன் சேர வாய்ப்புள்ளது என கமல் தான் தெரிவித்திருக்கிறாரே தவிர ரஜினி அது குறித்து எதுவும் பேசவில்லை" என்றார்.