தமிழகம்

புளியங்குடியில் வெறிநாய் கடித்து 8 ஆடுகள் பலி: ரூ.65,000 இழப்பு ஏற்பட்டதாக கால்நடை விவசாயி வேதனை

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வெறிநாய் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி லெப்பை சாயபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சேக் முகம்மது (56). இவர், தனது வீட்டின் அருகில் ஆடு வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இவரது ஆடுகளை வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதில், 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டன.

இதுகுறித்து சேக் முகம்மது கூறும்போது, “10 ஆடுகளை வீட்டின் அருகில் கட்டிப் போட்டிருந்தேன். அவற்றை வெறிநாய் கடித்ததில் 8 ஆடுகள் இறந்துவிட்டன. ஒரு ஆடு மட்டும் காயத்துடன் உயிருக்குப் போராடுகிறது. ஒரு ஆட்டைப் காணவில்லை. இறந்த ஆடுகளில் மதிப்பு ரூ.65 ஆயிரம்.

வெறிநாய் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததற்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT