கனிமொழி: கோப்புப்படம் 
தமிழகம்

சாலை விபத்தில் படுகாயமடைந்து பேராசிரியை மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கனிமொழி (25). இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த பிப்.27-ம் தேதி, தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். உடனடியாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கனிமொழி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி, கனிமொழி மூளைச்சாவு அடைந்ததை, மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின், அவரது உடல் உறுப்புகளைத் தானமளிக்க, அவரது பெற்றோர் முன்வந்தனர்.

ஒரு சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் என 7 பேருக்குத் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து விமானத்தில் மதுரை, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT