நீட் ஆள்மாறாட்டத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இல்லை என, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (மார்ச் 2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக எந்த ஆவணத்தையும் காவல்துறை எங்களிடம் கேட்கவில்லை. எங்களுக்கு இதில் நேரடியான தொடர்பு இல்லை. 2019-ம் ஆண்டில் நீட் தேர்வில் முறைகேடு என்பதை ஊடகங்களின் வழியாகத்தான் நாங்கள் அறிந்தோம். இரு மாணவர்களை சஸ்பெண்ட் செய்ததாக எங்களுக்குத் தகவல் வந்தது.
மாணவர்களைத் தேர்வுக்குழுதான் தேர்வு செய்கிறது. அதனால், பல்கலைக்கழகம் இதில் நேரடியாக உள்நுழைவதில்லை. மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு பதிவு செய்யும்போதுதான் பல்கலைக்கழகத்திடம் அவர்கள் வருவார்கள். அப்போது நாங்கள் மறுபடியும் ஆவணங்களை சோதனை செய்கிறோம்.
ஆள்மாறாட்டம் என்பது ஆவணங்களில் பிரதிபலிக்கப் போவதில்லை. அதனால் எங்களுக்கு இதில் நேரடித் தொடர்பும் இல்லை. இதுகுறித்த மற்ற விவரங்களும் எங்களிடம் இல்லை. காவல்துறையும் எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை" என சுதா சேஷய்யன் தெரிவித்தார்.