வீட்டில் வயது வந்த பெண் இருந்தால், பெண் கேட்டு வருவது வழக்கம்தானே என்று தேமுதிக எம்.பி. சீட் கேட்பது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி நேற்று இரவு 8.05 மணிக்கு தனியார் விமானம் மூலம் சென்னை சென்றார். முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது, மு.க. ஸ்டாலின் குரங்கு கதை கூறியுள்ளார். அவர் எண்ணங்கள் போன்று அவ்வாறு உவமை காட்டுகிறார்.
குடியுரிமைச் சட்டம் தொடர் பான போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் தெளிவாகக் கூறிவிட்டேன். இது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தெளிபடுத்தி உள்ளார்.
கடந்த 2003-ல் பாஜக-திமுக கூட்டணியின்போதே என்பிஆர் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2010-ல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே இருந்த என்பிஆர் திட்டத்தில் தற்போது மொழி, தாய், தந்தை பிறப்பிடம், ஆதார், குடும்ப, வாக்காளர் அடை யாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றை விரும்பினால் கொடுக்கலாம். கொடுக்காமலும் இருக்கலாம். இதுபற்றி மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
எந்தத் துறையில் முறைகேடு இருந்தாலும், அதை விசாரித்து தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.
முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு அதிமுகதான் முகவரி தந்தது. அவர் நுழையாத கட்சியில்லை. அதிமுக விசுவா சத்தை மறந்தவர்கள் விலாசம் தெரியாமல் போவர்.
கிராமங்களில் இணையதள வசதி வழங்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இத்திட்டத்தால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இணைய தள வசதி பெற முடியும். இச் சூழலில் அத்திட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. திட்டம் வரும் முன்பே அதில் ஊழல் என எப்படி பேச முடியும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் மனதில் நிலையாக அதிமுக நின்றுவிடும் என்ற அச்சத்தில் பொய்ப்பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ஜப்பான் நிறுவனம் கடனுதவி செய்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக மாநிலங்களவை எம்.பி. பதவியைக் கேட்கிறது.
அது அக்கட்சியின் உரிமை. தேர்தல் அறிவித்த பிறகு அது பற்றி பேசலாம். வீட்டில் வயது வந்த பெண் இருந்தால் பெண் கேட்டு வருவது வழக்கம் தானே. அதுவும் நல்ல பெண்ணாக இருந்தால் கேட்பார்கள். அதுபோன்று கூட்டணியில் இருப்பவர்கள் பதவி கேட்பார்கள். அதற்கு உரிய நடவடிக்கையை கட்சித் தலைமை எடுக்கும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.