‘‘கட்சியினரின் செயல்பாட்டில் உள்ள குறைகளை களைந்து, அதிகார இலக்குகளை அடைய உண்மையாக பாடுபடுவோம்’’ என்று பாமக தேர்தல் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமக தேர்தல் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், சென்னை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித்தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாநில இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் க.பாலு உட்பட தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கோரிக்கையை தமிழகஅரசுக்கு அழுத்தம் கொடுத்து,நிறைவேற்றச் செய்த ராமதாஸ்,அன்புமணி ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும். காவிரி பாசனமாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதன் தொடர்ச்சியாக நாகை, கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட விருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத் திட்டத்தையும் ரத்து செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சமூகநீதிக்கு எதிரான கிரீமிலேயர் முறையை ரத்து செய்ய வேண்டும். காவிரி - கோதாவரி இணைப்பு திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவுடன் இணைந்துஎதிர்கொள்ள பாமக தயாராக உள்ளது என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீளும் தொடுவானம்
இவைதவிர, பாமக தொடங்கப் பட்டு 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை பக்கங்களைப் பார்த்தால், அவற்றில் பாமகவின் பெயர்தான் நிறைந்திருக்கும். மக்கள் நலனுக்கான அறிக்கைகள், போராட்டங்கள், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான உத்திகள் என மக்கள் நலனுக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது மட்டும் தொடுவானமாக நீண்டுகொண்டே செல்கிறது. இதற்கு காரணமான நமது செயல்பாட்டில் உள்ள குறைகளை களைந்து மக்களுடன் மக்களாக கலந்து பணியாற்றுவதன் மூலம் அதிகார இலக்கை அடைய வேண்டும். அதிகார இலக்குகளை அடைய உண்மையாக பாடுபடுவோம் என்ற அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, ‘‘2021-ம் ஆண்டில் பெருந்தலைவர்கள் இல்லாத தேர்தலைசந்திக்க உள்ளோம். திமுக பணத்தையும், பிரசாந்த் கிஷோரையும் மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், பாமக மக்களை நம்பியுள்ளது. வெறுப்பு அரசியலை பயன்படுத்தி தவறான கருத்துகளை மக்களிடம் விதைத்து பொய்யான அரசியலை மேற்கொண்டு வருபவர்களிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.
அன்புமணி பேசும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தலுக்கு முன்பாக ராமதாஸ் அறிவிப்பார். கூட்டணி குறித்து ஊடகங்களில் வெளியிடும் செய்திகளை நம்ப வேண்டாம். வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஒரே கட்சி பாமக உள்ளது. பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமித்திருக்கும் திமுகவில் உள்ளவர்கள் மக்கி போனவர்கள். சிஏஏ குறித்து ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. குடியுரிமைச் திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் கிடையாது’’ என்றார்.