கொடைக்கானல் மோயர் பாய்ண்ட் பகுதியில் இருந்து பள்ளத்தாக்கை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள். 
தமிழகம்

வெயிலின் தாக்கத்துக்கு இடையே மிதமான குளிர்காற்று- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போதே அதிகரித்துள்ளது.

கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்தபோதும் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காணப்படும்.

இந்தமுறை கோடை சீசன்வரை காத்திருக்காமல் தற்போதேகொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கிவிட்டனர். தரைப்பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதுதான் இதற்குக் காரணம்.

வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, மோயர் பாய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

திண்டுக்கல், மதுரையில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவிய நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொடைக்கானலில் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் நேற்று பகலில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டது. பகலில் மேகமூட்டம் காணப்பட்டது. காற்றில் 57 சதவீதம் ஈரப்பதம் இருந்ததால் மெல்லிய குளிர்க்காற்று சுற்றுலாப் பயணிகளை சிலிர்க்க வைத்தது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னரே கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பி.டி.ரவிச்சந்திரன்

SCROLL FOR NEXT