ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சேலம் கோட்டையில் இஸ்லாமிய பெண்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14-வது நாளான நேற்று நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம், முத்தரசன் கூறியதாவது:
குடியுரிமை சட்டத்துக்கு எதிராகநாடே போராடி வருகிறது. இதைதிசை திருப்ப நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தி, மக்களை மதரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு திட்டமிடுகிறது. ‘டெல்லியைப்போல, தமிழகத்திலும் கலவரம் ஏற்படும்’ என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை இல்லை. ஆனால், அமைதிப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மாறாக, எதிர்க்கட்சிகளைக் கண்டித்து போராட்டம் நடத்த பாஜக-வுக்கு காவல்துறை அனுமதி வழங்குகிறது.
ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார். அத்தீர்மானத்தை தோற்கடித்திருப்பார். ‘குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இல்லை என கூறும் ரஜினிகாந்துக்கு, தன் மீதே நம்பிக்கை இல்லை என்றார்.