தவறுகள் செய்துள்ள சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரியில் வரும் 4-ம் தேதி புதிய மருத்துவக் கல்லூரிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாகவே மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு எந்தவிதமான தீங்கும் இல்லை என்பதை அவர்களின் அடி மனதில் கொண்டுபோய் நிறுத்தியிருக்க வேண்டும். அந்த சிறிய தவறு செய்த காரணத்தில் இன்று இவ்வளவு பிரச்சினை வந்துள்ளது.
10 ஆண்டுக்கொருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது தொடர் நடவடிக்கையாக உள்ளது. இதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. மக்கள் பதிவேடு குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் 70 ஆண்டுகளில் சமூகத்துக்கு எதையாவது செய்திருக்கிறார்களா, சிந்தித்திருக்கிறார்களா? முடிந்தால் அவர்கள்பதில் சொல்லட்டும். இளம் வயதிலேயே மக்கள் மத்தியில் வந்திருக்க வேண்டும். 70 வயதுவரை எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவித்துவிட்டு எல்லா நிலையிலும் உயர்ந்துவிட்டு, இப்போது நாங்கள் இந்த நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்று சொன்னால் ஏற்க முடியாது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சிக்கு வர பல்வேறு முயற்சிகள் செய்துவிட்டார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பிரஷாந்த் கிஷோரை அழைத்து வந்தால் இந்த அரசை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் வர முடியுமாஎன்ற ஏக்கத்தில், எதிர்பார்ப்பில்வாடகை மூளையை ஸ்டாலின் அமர்த்தியிருக்கிறார்.
சசிகலா சிறையில் இருந்து வந்தபின்னர் அதிமுகவில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று சொல்வது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். சட்டரீதியாக அவர் வெளியே வருவாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. காரணம் சிறையில் அவர் நன்னடத்தையோடு செயல்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. தவறுகள் செய்துள்ள அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அவர் எப்போது வந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இனி இக்கட்சியில் அவருக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. நடை சாத்தப்பட்டுவிட்டது. வந்தால் அவர்கள் வெளியே நின்று கும்பிட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.