இந்தியன்-2 திரைப்பட படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியான விவகாரம் தொடர்பான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை, பூந்தமல்லி அருகேநசரத்பேட்டையை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில்,நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி இரவு நடைபெற்ற படப்பிடிப்பின்போது, விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 3 பேர் உயிர் இழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்து தொடர்பாக சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத்பேட்டை காவல் நிலையபோலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னைமத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கினர். விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்ததாக இயக்குநர் ஷங்கருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
விசாரணைக்கு வந்து ஷங்கர்அளித்த அனைத்து தகவல்களையும், போலீஸார் வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர்.
விசாரணை முழுமையடைய வேண்டும் என்றால் கமல்ஹாசனிடம் விசாரிப்பது அவசியம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர். அதன் தொடர்ச்சியாக நாளை (3-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அவரிடம் எங்கு வைத்து விசாரிக்க வேண்டும், என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்ற பட்டியலையும் போலீஸார் தயார் நிலையில் வைத்துள்ளனர்.