பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி முதல் வழங்க வேண்டியுள்ளதால் உற்பத்தியை துரிதப்படுத்தும்படி அமைச்சர் கோகுல இந்திரா அறிவுறுத்தியுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில், வேட்டி, சேலை உற்பத்தி குறித்து கைத்தறித்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா சென்னையில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான பாவு மற்றும் ஊடு நூல்கள், நெசவாளர் களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி ஆகியவற்றை தேவையான அளவு உடனுக்குடன் வழங்கி உரிய காலத்தில் உற்பத்தியை முடிக்க நெசவாளர் சங்க தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு அமைச்சர் கோகுல இந்திரா அறிவுரை வழங்கினார்.
ஜனவரி மாதம்
மேலும் பொங்கலையொட்டி ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் தமிழக அரசால் இலவச வேட்டி, சேலைகளை வழங்க உள்ளதால், இலவச வேட்டி சேலை உற்பத்தியை துரிதப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, கைத்தறித்துறை செயலர் ஹர்மந் தர்சிங், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் வெங்கடேஷ், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எ.சுந்தரவல்லி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.