தமிழகம்

தமிழகம் முழுவதும் மீன்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் உள்ள மீன்சந்தைகளில் மீன்களின் தரத்தைஆய்வு செய்ய உத்தரவிடப்பட் டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காசிமேடு மீன் சந்தையில் கடந்த 28-ம் தேதி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு விற்கப்பட்ட மீன்களில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் தரம் குறைவாகவும் கெட்டுப்போன நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டது.

இத்தகைய மீன்கள் 2 டன் அளவில் உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடும் நடவடிக்கை

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் தரத்தை உறுதி செய்திடவும் தரம் குறைவான மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாநிலம் முழுவதும் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மீன்கள் மற்றும் மீன் பொருட்களின் தரத்தினை தொடர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT