காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவுகளைச் சேர்ந்த இருசாராரும் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இணைந்து வழிபாடு நடத்தினர். தினசரி வழிபாடு உட்பட தேவையான அனைத்து வழிபாடுகளிலும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்பற்றப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைணவ சமயத்தைச் சார்ந்தோர் வடகலை, தென்கலை என்ற 2 பிரிவுகளாகப் பிரிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இரு பிரிவினரும் ஆழ்வார்களை ஏற்றுக்கொள்வர். வடகலை பிரிவினர் ஸ்ரீ வேதாந்த தேசிகரை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள். தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகளை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள்.
இவர்கள் இருதரப்பினரும் காலை, மாலை வேளைகளில் கோயில் நடை திறந்து பூஜை நடக்கும்போது நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி வழிபாடு நடத்துவர். இதில் தென்கலை பிரிவினர் மண வாள மாமுனிகளின் சைலேச தயாபாத்ரம் தொடங்கி பிரபந்தம் சேவிப்பர். முடிக்கும்போது மணவாள மாமுனிகளின் வாழித் திருநாமம் சொல்லி முடிப்பர். இதுவரை, இவ்வாறு வழிபாடு நடந்து வந்தது. இதில் வடகலை பிரிவினர் பிரபந்தம் மட்டும் சேவிப்பர். வேதாந்த தேசிகரின் ராமானுஜ தயாபாத்ரம், வாழித் திருநாமம் இரண்டும் சேவிக்கப்பட வேண்டும் என்று வடகலை பிரிவினர் கோரிக்கை வைத்தனர். வழக்கத்தில் உள்ள நடைமுறையை மாற்றக் கூடாது என்று கூறி தென்கலை பிரிவினர் அதை ஏற்கவில்லை. இதனால் இரு சாராருக்கும் பிரச்சினை ஏற்பட்டு நீண்ட காலமாக நீடித்து வந்தது.
நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு
இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கோயில் நிர்வாக அதிகாரி பூஜை நேரங்களில் முதலில் தென்கலை பிரிவினர் தங்கள் குருவின் ஸ்ரீசைலேச தயாபாத்ரத்தில் உள்ள முதல் 2 வரிகளை மட்டும் பாட அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு வடகலை பிரிவினரை அழைத்து அவர்கள் தங்கள் குருவின் ஸ்ரீராமானுஜ தயாபாத்ரத்தில் உள்ள முதல் 2 வரிகளை பாட அனுமதிக்க வேண்டும்.
அதன்பிறகு இருசாராரும் ஒன்றாக இணைந்து பிரபந்தம் பாட வேண்டும். முடிவில் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகர் வாழித் திருநாமமும் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறியிருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த உத்தரவு கோயிலில் அமல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதிகாலையிலேயே வடகலை, தென்கலை பிரிவினர் கோயிலுக்கு வந்து நடை திறப்பதற்கு முன்பு காத்திருந்தனர்.
வழிபாட்டுக்கான நேரம் தொடங்கியதும் தென்கலைப் பிரிவினர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாகவும், ஆனால் இந்தப் பிரச்சினை ஆழ்வார்கள் சாற்றுமுறை உற்சவங்களின்போது ஏற்பட்டதால் நீதிமன்ற உத்தரவை அந்த நேரங்களில் மட்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
வடகலை, தென்கலை பிரிவைச் சேர்ந்த இருதரப்பினரும் வரதராஜப் பெருமாளுக்கு இருபுறமும் ஒன்றாக கலந்தவாறு அமர்ந்திருந்தனர். ஒன்றாக அமர்ந்திருக்கும்போது இருதரப்புக்கும் இடையில் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் வடகலை பிரிவினர் ஒருபுறமும், தென்கலை பிரிவினர் ஒருபுறமும் அமரும்படி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
நீதிமன்ற உத்தரவில் அனைத்து பூஜைகளுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவு தினசரி வழிபாட்டிலும் கடைபிடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, முதலில் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகளின் ஸ்ரீ சைலேச தயாபாத்ரப் பாடலைப் பாடினர். பின்னர் வடகலைப் பிரிவினர் வேதாந்த தேசிகரின் ராமானுஜ தயாபாத்ரப் பாடலைப் பாடினர். பின்னர், இருவரும் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாடினர். முடிக்கும்போது தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமத்தை பாடினர். வடகலை பிரிவினர் தேசிகர் வாழித் திருநாமத்தை பாடி வழிபாட்டை நிறைவு செய்தனர். இந்த வழிபாடு முடிந்து பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அமைதியாக நடந்த வழிபாடு
வடகலை, தென்கலை பிரிவினர் இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த வழிபாட்டு பிரச்சினை நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி சுமுகமாக முடிந்து, அமைதியான முறையில் வழிபாடு நடைபெற்றது.
தென்கலை பிரிவினர் வைத்த கோரிக்கை தொடர்பாக கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றம் தனது உத்தரவில் எல்லா பூஜைகளிலும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படிதான் வழிபாட்டு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.