தமிழகம்

ரூ.1 கோடி கடனுக்கு வட்டி வசூலில் பல லட்சம் மோசடி?- பெருமாநல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீது புகார்

இரா.கார்த்திகேயன்

பெருமாநல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.1 கோடி கடனுக்கு, வட்டி வசூல் விகிதத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியைச் சேர்ந்தவர் எஸ்.சுப்புராமன் (40). உணவக உரிமையாளர். பெருமாநல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 33 சென்ட் நிலத்தை அடமானமாக வைத்து, உணவக விரிவாக்கம் மற்றும் கட்டிடம் கட்டுவதற்காக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலுக்கான திட்டத்தில் (MSME) ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக சுப்புராமன் கூறியதாவது: இதுவரை வாங்கிய ரூ.1 கோடி கடனுக்கு, வட்டியுடன் ரூ.1 கோடியே 30 லட்சம் செலுத்தி உள்ளேன். இதுவரை செலுத்திய வட்டி விகிதத்துக்கான விவரத்தை கோரினேன். அப்போது கூடுதலாக சுமார் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. வங்கித்தரப்பில் கேட்டபோது, எனது வங்கிக் கணக்குக்கு கடந்த மார்ச் 30-ம் தேதி ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்தை திரும்ப செலுத்தியது வங்கி நிர்வாகம். எஞ்சிய பணத்தை திரும்பத் தருவதாக உறுதிமொழி கடிதம் அளித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை.

இந்நிலையில், பெருமாநல்லூர் வங்கிக் கிளை மேலாளர் மனோகரன், பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்க நான்தான் காரணம். எனது மகன் தொழில் தொடங்க உள்ளார். அவருக்கு ரூ.1 லட்சம் அவசரமாகத் தேவைப்படுகிறது. பணம் தந்தால், ஓரிரு மாதங்களில் திருப்பித் தருவதாகக் கூறினார். இதனை நம்பி ரூ.1 லட்சத்தை அவரது மகன் வங்கிக் கணக்குக்கு செலுத்தினேன். அந்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீஸாரிடம் புகார் அளித்தேன். புகாரை பெற்றுக் கொண்டதற்கான ரசீதை மட்டும் போலீஸார் வழங்கி உள்ளனர்.

வங்கி மேலாளரின் மகனுக்கு செலுத்திய கடன் பணத்தை திரும்பக் கேட்டதால், வங்கி மேலாளர், முறைகேடாக வசூல் செய்யப்பட்ட வட்டி பணத்தை திரும்ப வழங்கவில்லை.

வட்டி விகித மாற்றம், மேலாளர் பணம் பெற்றது தொடர்பாக மண்டல மேலாளர், பொதுமேலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு தனித்தனியாக புகார் அளித்தேன். இன்றைய தேதி வரை, எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

கடன்பெறும் வியாபாரிகளின் அறியாமையை அவர்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, வங்கிக் கடனை கூடுதலாக வசூலிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் வங்கியில் காரை வைத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றேன். அந்தக் காருக்கான கடன் தொகை முழுவதும் செலுத்திவிட்ட நிலையில், வங்கித் தரப்பில் பெறப்பட்ட மாற்றுச்சாவி எனக்கு இதுவரை வழங்கவில்லை. அவர்கள் தொலைத்து விட்டதாக அலட்சியமாகத் தெரிவித்தனர். முறைகேடாக வசூலிக்கப்பட்டு வங்கித் தரப்பில் வட்டியுடன் எஞ்சியுள்ள ரூ.10 லட்சத்தை விரைவில் திரும்ப வழங்க வேண்டும் என்றார்.

வங்கி விளக்கம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கோவை மண்டல மேலாளர் ராமநாதன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: வங்கி வாடிக்கையாளர் சுப்புராமன், ரிசர்வ் வங்கியின் புகார் மையம் (RBI OMBUDSMAN), பிரதமரின் குறைதீர் ஆணையம் (PG PORTAL), முதல்வர் தனிப்பிரிவு என பல்வேறு பகுதிகளில் புகார் அளித்துள்ளார். அதனை வங்கித் தரப்பில் சட்டக்குழு கையாண்டு வருகிறது.

பேலன்ஸ் ஷீட் சரியாக கொடுக்கவில்லை. வட்டியை முறையாக செலுத்தவில்லை. 3 மாதம் தவணை செலுத்தாததால், வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் கேட்டுக்கொண்டதன் பேரில், வாடிக்கையாளர் என்ற அடிப்படையில்தான், அவருக்கு ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்தை திருப்பிச் செலுத்தினோம். கிளை மேலாளர் மனோகரன் மகனுக்கு கடன் கொடுத்த விவகாரத்துக்கும், வங்கிக்கும் தொடர்பில்லை. வங்கிக் கிளை மேலாளர் மனோகரன் தற்போது அங்கு இல்லை. அவரை கொல்கத்தா கிளைக்கு மாற்றி உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT