தமிழகம்

அமைதிப்போராட்டங்களுக்கு எதிராக மோதல் போராட்டங்களுக்கு அனுமதி; தமிழகத்திலும் சட்டம் ஒழுங்கு கெடும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

செய்திப்பிரிவு

அமைதியான மக்கள் போராட்டத்திற்கு எதிராக பாஜக போன்ற கட்சிகளின் மோதல் போராட்டங்களை அனுமதித்தால் தமிழகத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 29.02.2020 அன்று சென்னையில், மாநில கட்சி அலுவலகத்தில் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு ஏஐடியூசி செயலாளர் டி.எம்.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நா.பெரியசாமி, எம்.ஆறுமுகம் மற்றும் திண்டுக்கல் க.சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“மத்திய அரசு அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நிறைவேற்றிருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டங்களும் மக்களை மத அடையாளப்படுத்தி பிளவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இதனால் பாதிக்கப்படக் கூடிய மக்கள் பகுதியினர் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் அடிப்படையில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு சட்டம் 370 மற்றும் 35ஏ பிரிவுகளிள் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகள் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டது. ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்தை இரண்டு ஒன்றியப் பகுதிகளாக பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என மத்திய அரசின் வரிசையான நடவடிக்கைகள் அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்தி சிதைப்பதாக அமைந்துள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், ஜாமிய மிலியா முஸ்லிம் பல்கலைக் கழகம், டெல்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் மதச்சார்பற்ற மாண்புகளை காக்கும் மக்கள் போராட்டமாக ‘ஷாகின்பாக்’கில் வளர்ந்தது. வடகிழக்கு டெல்லியின் பல்வேறு மையங்களில் அமைதி வழிப் போராட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவிப் படர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகள் சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. பாஜக மத்திய அரசு தனது பிடிவாத நிலையைத் தளர்த்தி மறுபரிசீலனை செய்யவும், மக்கள் விரோத சட்டத்தை ரத்து செய்யவும் முன்வராததால் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. ஜனநாயக அரசியல் அமைப்பில் கருத்துரிமை, போராடுகிற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால் பாஜக மத்திய அரசும், அதன் கூட்டணி மாநில அரசுகளும் போராட்டங்களை அனுமதிக்க மறுத்து தடை உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. இந்த நிலையில் ஜனநாயக ரீதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை பலாத்காரமாக கலைத்திட வன்முறை கும்பல்களின் வெறியாட்டம் தொடங்கியுள்ளது. இதனால் இதுவரை விலைமதிக்க முடியாத 63 மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்த நிலையில் (28.02.2020) தமிழ்நாட்டில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளின் பெயரில் மாநிலம் முழுவதும் வன்முறைக் கலவரத்தை வெடிக்க செய்யும் நோக்கத்தோடு ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரான மோதல் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இது ஜனநாயகப் பண்பிற்கு எதிரானதாகும். உற்பத்தித் தொழில்களும், வணிகமும் நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டில் இத்தகைய வகுப்புக் கலவரங்கள் பேரழிவுவை ஏற்படுத்தும் என்பதை மாநில அரசுக்கு சுட்டிக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, கலவர பூமியாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மதவெறி, சாதி வெறிக் கும்பல்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே தமிழ்நாடு அரசின் அணுகுமுறை அமைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும் பேரபாயம் உருவாகியுள்ளது.

எனவே மோதல் போராட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இதில் அலட்சியம் காட்டப்பட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது”.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT