தமிழகம்

சிஏஏ வந்தால்தான் அகதியா?-  டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போதே அகதிகளாகத்தான் வாழும் நிலை: இயக்குநர் அமீர் பேச்சு

செய்திப்பிரிவு

சிஏஏ வந்தால்தான் அகதிகள் என்றார்கள், ஆனால் டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சேமிப்பு, வீடு, வாழ்வாதாரத்துக்கான அத்தனை விஷயங்களையும் இழந்து நாளைய சாப்பாட்டுக்குக் கூட கையேந்தி நிற்கும் நிலையில் இப்போதே அகதிகளாக வாழும் நிலைதான் ஏற்பட்டுள்ளது, என்று இயக்குநர் அமீர் பேசினார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இயக்குநர் அமீர், வெற்றிமாறன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இயக்குநர் அமீர் பேசியதாவது:

தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது வேதனையாக இருக்கிறது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள் என்கிறார். இங்கு யாரும் பாதிக்கப்படவில்லை, ஆனால், பாதிக்கப் போகிறார்கள் என்பது தான் உண்மை. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கருப்பு பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்றார்கள்.

அப்போது வரிசையில் நின்று இறந்து போனது சாமானியர்கள் தான். இந்தச் சட்டமும் அதன் வழியிலேயே இருக்கிறது. இப்போது யாருக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள். ஆனால், ஏப்ரலில் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கிவிட்டார்கள் என்றால் அனைத்து விதமான பாதிப்பும் வரும்.

பள்ளிக்கூடத்திலிருந்து இந்தியா என் தாய்நாடு என்றே வளர்ந்தவன் நான். திடீரென்று ஒரு நாள் நீ இந்தியன் இல்லை என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியொரு சட்டம் வரவேண்டிய அவசியம் என்ன?.

நேற்றைக்கு சென்னையில் நடத்தப் பேரணியில் சில கோஷங்கள் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. டெல்லியில் நடப்பது போன்று வண்ணாரப்பேட்டையில் மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கும் நடந்துவிடக் கூடாது. சில சக்திகளின் தூண்டுதலுக்கு ஆசைப்பட்டு யாரும் போகக் கூடாது. இந்த தேசம் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

அதிலும் மாநிலத்தின் முதல்வர் சிஏஏ குறித்து தனக்கு எந்த புரிதலும் இல்லாமல் வாக்களித்தேன் என்று சொல்வது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்த அரசே எப்படி ஒரு இன்னலைத் தர முடியும். இதுவொரு வேதனைக்குரிய விஷயம்.

ஹிட்லர் எப்படி வீழ்ந்தார் என்பதை பார்த்துள்ளோம். மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். குறிப்பாக மாநில முதல்வர் எடப்பாடி அவர்களே நீங்கள் என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை எடுக்க மாட்டோம் என்று சொன்னாலே, தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறும். போராட்டங்கள் எல்லாம் நின்றுவிடும் என்பது என் நம்பிக்கை.

அவர் அதைக் கூடச் சொல்ல மறுக்கிறார். ஒரு வேளைஅதைச் சொன்னால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்தரப்பு மிரட்டினால் அதை நாம் கண்டிக்க வேண்டும். நாம் வாக்களித்து தேர்வு செய்த அரசை, இன்னொருவர் மிரட்டுவது ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கும் செயல். அது சர்வாதிகாரத்தின் உச்சம்.

என்பிஆர், என்சிஆரைக் கொண்டு வரக் கூடாது. தமிழகத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கக் கூடாது. நேற்றையக் கூட்டத்தில் திராவிடக் கட்சியிலிருந்து மாறிய நடிகர் எப்படி இந்த மாதிரியான வார்த்தைகளை உதிர்க்கிறார் எனத் தெரியவில்லை. நண்பர்களாக இருக்கும் எங்களுக்குள் அரசியல் செய்யாதீர்கள். இது ரொம்பவே வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

தமிழக முதல்வர் அவர்களே, வண்ணாரப்பேட்டையில் தடியடி நடந்த இடத்தில் நீங்களோ, துணை முதல்வரோ சென்று அங்குள்ள மக்களிடம் என்ன பிரச்சினை என்று ஏன் கேட்கக் கூடாது?. இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. டெல்லியில் நடந்தது போன்ற ஒரு நிகழ்வு, இனி நடக்கவே கூடாது. தமிழகத்தில் உள்ள யாரும் இதுக்கு துணை போய்விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை விடுக்கவே இந்த சந்திப்பு.

உலகில் நான் தான் நம்பர் 1 என்று சொல்லக் கூடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருக்கும் போது, தலைநகரில் இப்படிபட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் அது எதேச்சையாக நடந்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டது தான். அதை அனைவருமே சிஏஏ ஆதரவாளர்கள் - சிஏஏ எதிர்ப்பாளர்கள் கலவரம் என்று ஒற்றை வரியில் முடித்து விடுகிறார்கள். அது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

இது இந்து - முஸ்லிம் கலவரம் எனவும் சொல்கிறார்கள். இதுவும் வருத்தக்குரிய விஷயம் தான். நடந்த கலவரம் இந்து - முஸ்லிம் கலவரம் அல்ல. சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்கிறார்கள். சிஏஏ வந்தால் நீ அகதி என்கிறார்கள், ஆனால் அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இப்போதே அகதிகளாகிவிட்டார்கள். ஒண்ட வீடு இல்லை, பொருட்கள் இல்லை, புத்தகம் இல்லை, எதுவுமே இல்லை, அனைத்தையும் அழித்துவிட்டார்கள். இனி அவர்களிடம் ஒன்றுமே இல்லை. வாழ்வாதாரம் முழுதுதையும் இழந்துவிட்டார்கள்.

சொந்த நாட்டில் இப்போதே ஒன்றுமில்லாமல் அகதிகளாகத்தான் இருக்கவேண்டிய நிலை, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லை. சிஏஏ வந்தால்தான் அகதிகளாக்கப்படுவார்கள் என்றார்கள், வராமலே இப்போது டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாகத்தான் வாழும் நிலை.அவர்களுக்கு என்ன நிவாரணம் கொடுத்தாலும் இனி பழைய நிலைக்கு வர முடியாது. அவர்கள் வாழ்க்கை கீழே போனது போனதுதான் ”.

இவ்வாறு இயக்குநர் அமீர் பேசினார்.

SCROLL FOR NEXT