டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (பிப்.29) நடைபெற்றது. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
"உலக அளவில் இந்தியா வெட்கப்பட்டு தலை குனியக்கூடிய வகையில் டெல்லியில் மதவெறி குண்டர்கள் நடத்திய வன்முறை அரங்கேறியுள்ளது.
டெல்லி ஜாப்ராபாத் பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனை பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் பகல், இரவு என்று பாராமல் முஸ்லிம்கள், குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
தங்கள் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில், ஆதரவு கும்பலுக்கு சுட்டிக்காட்டும் வகையில் ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக அறவழியில் போராடுகின்றனர். இது மிகப்பெரிய நெருக்கடியை மோடி அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மதவெறியர்கள், அவர்களை கலைக்க வேண்டும், இந்தியா முழுவதும் அடுத்தடுத்து போராட்டம் நடத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சியாளர்களோடு, அதிகார வர்க்கத்தினரோடு திட்டமிட்டு வன்முறையை நடத்தி முடித்துள்ளனர்.
இது திடீரென ஏற்பட்ட வன்முறை அல்ல. பொறுப்புள்ள மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர் யாராக இருந்தாலும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுங்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோதே இந்த வன்முறை நடைபெற்றது. அமைதியாக போராடுகிறவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெறுகின்றது. மசூதிகளில் மீது ஏறி உடைக்கப்படுகின்றது. இந்த கலவரத்தில் இதுவரை 40 பேர் இறந்துள்ளனர். போராடியவர்கள் தூக்கிச்செல்லப்பட்டு தாக்கப்பட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாற்றுக் கருத்தை பேசக்கூடாதா? எதிர்கருத்தை சொல்லக்கூடாதா? போராட்டங்கள் நடத்தக்கூடாதா?
தொடர்ந்து 4 நாட்கள் கலவரம் நடைபெறுகிறது என்றால் அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு இல்லையா? டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மீதும், காங்கிரஸ் மீதும் குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு தப்பிவிடலாம் என்று எண்ணுகின்றனர். கேஜ்ரிவாலின் அமைதி மீது சந்தேகம் எழுகிறது. தொடர் கலவரம் நடைபெறும்போது அவற்றை பற்றி பேசவில்லை. காவல்துறையை எச்சரிக்கவில்லை. இது வியப்பாக இருக்கிறது. உள்துறை அமைச்சருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கபில் மிஸ்ரா, அனுராக் மீதும் ஏன் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவில்லை? டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர ராவ் இதுபற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்றிருக்கும் வன்முறை ஒரு ஒத்திகை. மதவெறி ஆட்டத்தை மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தலித்துகளுக்கு மதம் இல்லை. அதனால் சிதறி கிடக்கின்றோம். மனு தர்மத்தை அரசு சட்டமாக்க முயற்சிக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகளும், பழங்குடி மக்களும் தான்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆண்ட கட்சியும் இல்லை. ஆளப்போகும் கட்சியும் இல்லை. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. சாதிய உணர்வுகளை கொண்ட இயக்கம் அல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் டெல்லி கலவரத்தை கண்டித்து போரட்டம் நடத்திய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி முதல்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.
டெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனடியாக பதவி விலக வேண்டும். டெல்லி கலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் கூடிய நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிந்து அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கலவரத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.