சென்னையில் அரசியல் கட்சிகள், மத, ஜாதி, சமூக அமைப்புகள், அமைப்புகள் நடத்துவோர், பொது அமைப்பினர் யாரும் அடுத்துவரும் 15 நாட்களுக்கு போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுதும் போராட்டம், பேரணி நடந்து வருகிறது. இவைதவிர பல்வேறு பிரச்சினைகளை ஒட்டி ஊர்வலம ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வடசென்னையின் வண்ணாரப்பேட்டைப் பகுதியில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சமீப காலமாக பிரிவு 41-ன் கீழ் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த போலீஸார் தடைவிதித்து உத்தரவிட்டு வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன் விதிக்கப்பட்ட தடை முடிவடையும் நிலையில் மீண்டும் தடைவிதித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41வது உட்பிரிவு -ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் போக்குவரத்து பகுதிகளில் சாலைகள், தெருக்களில் கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனிதச் சங்கிலி அமைப்பது போன்றவற்றை நடத்தும் 28-2-2020 அன்று இரவு 9 மணி முதல் மார்ச்- 14 அன்று இரவு 9 மணி வரை மேற்கண்ட 2 நாட்கள் உட்பட 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இருப்பினும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஐந்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.