மிஸ்டு கால் திட்டத்தின் மூலம், வரும் மார்ச் 23-ம் தேதிக்குள் 3.5 லட்சம் பேரை சேர்க்க ஆம் ஆத்மி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில இணைச் செயலாளர் டி.சுதா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கட்சியின் தேசிய கட்டமைப்பை வலுப்படும் வகையில் மிஸ்டுகால் திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்தி வருகிறோம். டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 10 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்து கட்சியில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் எங்கள் கட்சி மிஸ்டுகால் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தவுள்ளது.
தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும், தொகுதிகள், வார்டுகளில் மக்களை நேரடியாக சந்தித்து எங்கள் கட்சியின் கொள்கைகளையும், டெல்லியில் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைக்கவுள்ளோம். தமிழகத்தில் மிஸ்ட்கால் திட்டம் மூலம் வரும் 23-ம் தேதிக்குள் புதியதாக 3.5 லட்சம் பேரை கட்சியில் சேர்க்கவுள்ளோம்’’ என்றார்.