தமிழகம்

போலி ஆவணம் மூலம் நில விற்பனையை தடுக்க பத்திரப் பதிவுக்கு முன்னரே உட்பிரிவுகளுக்கு ஒப்புதல்- முதல்கட்டமாக கிருஷ்ணகிரி, பெரம்பலூரில் அறிமுகம்

செய்திப்பிரிவு

போலி ஆவணங்கள் மூலம் நிலங்கள் பதியப்படுவதை தடுக்க, பத்திரப் பதிவுக்கு முன்னரே உட்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறும்புதிய நடைமுறையை கிருஷ்ணகிரி, பெரம்பலூரில் முதல்கட்டமாக வருவாய்த் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு வருவாய்த் துறை மானியகோரிக்கையின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிவிப்பில், “போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, பத்திரப்பதிவுக்கு முன்னதாகவே உட்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். இந்த நடைமுறையின்கீழ் நிலங்களை விற்பவர்கள் அது சார்ந்த வட்ட அலுவலகங்களுக்கு சென்று, தான் விற்க விரும்பும் நிலம், சொத்துகளின் சான்றளிக்கப்பட்ட நகலை விண்ணப்பித்து பெற வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் வட்ட அலுவலகங்களில் உள்ள நில அளவை பணியாளர்கள் விசாரணை மேற்கொள்வார்கள். அதன்பின் ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையதள வழியில் தொடர்புடைய சார் பதிவகம் மற்றும் நில உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னரே, நில உரிமையாளர் தனது நில பரிவர்த்தனையை சார்பதிவகம் மூலம் மேற்கொள்ள முடியும். அதன்பின் இணையதள வழி பட்டா மாறுதல் விவரங்கள், மீண்டும் புலத்தணிக்கை ஏதுமின்றி தொடர்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

இதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு, வருவாய்த்துறையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கிராமப்பகுதிகளில் நிலங்களை விற்க விரும்பும் உரிமையாளர்கள், தங்கள் நிலத்துக்கு ஆன்லைன் பட்டா பெறாமல் இருந்தால், முதலில் ஆன்லைனில் நிலங்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட புலப்பட நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக கிராமப்பகுதிகளில் 2 ஏக்கர் வரை ஒரு உட்பிரிவுக்கு ரூ.1000 அதன்பின் ஒவ்வொரு கூடுதல் ஏக்கருக்கும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் ஒரு கிரவுண்டு அதாவது2400 சதுரடி வரை ரூ.1000 செலுத்தவேண்டும். அதற்கு மேல் இடத்தைப் பொறுத்து கட்டணத்தொகை அதிகரிக்கும்.

இதற்கான விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் புலப்படம்வழங்கப்படும். விண்ணப்பம் ஏற்கப்படாவிட்டால் 30 நாட்களுக்குள் தள்ளுபடி செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையிலான விண்ணப்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் அடிப்படை கட்டணமாக வசூலிக்கப்படும். நிலத்தின் அளவை பொறுத்து கட்டணம் பல மடங்காகும். இந்த விண்ணப்பங்களுக்கு 10 நாட்களில் புலப்படம் வழங்கப்படும். இந்த திட்டம் சோதனை அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி தாலுகாக்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகாக்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT