தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி இறந்த யானைகள். 
தமிழகம்

கரும்புத் தோட்ட மின்வேலியில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பரிதாபம்

செய்திப்பிரிவு

தாளவாடி அருகே கரும்புத்தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகப் பகுதியில் கரளவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவிவசாயி கருப்புசாமி, தனதுதோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.

வனப்பகுதியையொட்டி உள்ளதால், தோட்டத்துக்குள் வன விலங்குகள் நுழைந்துவிடாதபடி தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கரும்புக்காட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆண் யானை மற்றும் ஒரு பெண் யானை ஆகியவை மின்வேலியில் சிக்கி நேற்று உயிரிழந்தன.

வனப்பகுதிகளில் உள்ளவிளைநிலங்களில் விளைபொருட்களைப் பாதுகாக்க வனத்துறை அனுமதியுடன் மின்வேலி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், வேலியில் குறைந்த மின் அழுத்தம் மட்டுமே பாய்ச்ச வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. விளைநிலத்தில் நுழைய முயலும் வனவிலங்குக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே மின்வேலி அமைக்கப்பட வேண்டும்.

மாறாக, விவசாயி கருப்புசாமி மின்வேலியில் அதிக மின் அழுத்தம் பாய்ச்சி இருந்ததால், யானைகள் இரண்டும் அடுத்தடுத்து உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஜீரஹள்ளி வனத்துறையினர், கருப்புசாமியைத் தேடி வருகின்றனர்.

பணப்பயிருக்கு தடை வேண்டும்

மின்சார வேலியில் சிக்கி இரு யானைகள் இறந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த சுற்றுச்சூழலியலாளர்கள், வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் விரும்பி உண்ணும் கரும்பு போன்ற பணப்பயிர்களை பயிரிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

வனப்பகுதியில் உணவு இல்லாத நிலையில், தனக்கு பிடித்தமான கரும்புத் தோட்டம் அருகில் இருந்தால், இயல்பாகவே யானைகள் வரத்தான் செய்யும். எனவே, வனப்பகுதியில் யானைகள் விரும்பி உண்ணும் புல் வகைகள், தாவரங்கள் போதுமான அளவு உள்ளதா என்பதை வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை விளைவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த வேலியில் மனிதர் ஒருவர்தொட்டிருந்தாலும் மரணம் ஏற்பட்டிருக்கும் என்பதால், மின்வேலியில் அதிக மின்சாரம் பாய்ச்சுவதை கொடுங்குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT