திமுக, அதிமுக இல்லாமல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
உலக அரங்கில் அதிக தொழில் தொடங்குவோர் வரிசையில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. ஆனால், இந்த முதலீட்டில் தமிழகத்தின் பங்கு வெறும் 0.79 சதவீதம்தான். தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புரட்சிகர பொருளாதார திட்டம்
எல்லோருக்கும் வளமான வாழ்க்கை என்பது வெற்றுக் கனவு அல்ல. புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தால் சாத்தியமாகக் கூடியதுதான். வறுமையை ஒழிப்பதோடு, அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்த புரட்சியினால் வேலை தேடும் இளைஞர்கள் மட்டுமில்லாமல் மாணவர்கள், இல்லத்தரசிகள் என எல்லோருக்கும் வருவாய் வாய்ப்புகள் உருவாகும்.
இல்லத்தரசிகளின் வேலைக்கு இதுவரை அங்கீகாரமோ, ஊதியமோ இல்லை. வீட்டில் அவர்கள் செய்யும் பணிக்கும் ஊதியம் வழங்கி வீட்டில் இருந்தபடியே அவர்களது வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்க வழிவகை செய்ய உள்ளோம்.
மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் இந்த புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தால், வளமான வாழ்க்கை எல்லோருக்குமானது என்பதை உறுதிப்படுத்துவோம்.
உலகத் தரத்தில் கட்டமைப்பு, மாணவர்களுக்கு தரமான கல்வி, அனைத்து விவசாயிகளுக்கும் நேரடி சந்தை, மீனவர்களுக்கு உயிர் காக்கும் தொழில்நுட்பம் மேம்பாடு, ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்த வீடு என எல்லோரையும் வளமாக்கும் திட்டமாகும்.
இது தமிழகத்தை மிக வேகமாக வளரும் மாநிலமாக மட்டுமல்லாமல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றும். பெரும் தொழிலதிபர்கள் 50 பேர் நமது பொருளாதாரத்துக்கு தேவைதான் என்றாலும், 5 லட்சம் சிறுதொழில் முனைவோர் நம் பொருளாதாரத்தை இன்னும் வேகமாக வலுப்படுத்துவார்கள்.
உண்மையான தீர்வு
புரட்சிகரமான பொருளாதாரத் திட்டம், மாற்றத்தை நோக்கி பயணிக்கும் அரசியல் பாதை, அதை வழிநடத்த நேர்மையான, திறமையான, தைரியமான, புத்துணர்ச்சியுடன் கூடிய தலைமை ஆகியவைதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு.
முதல்வர் வேட்பாளர்களில் இத்தகைய தலைமைப் பண்புகள் கொண்டவர்கள் யாரும் இல்லையா என்று கேள்வி எழுகிறது. கண்டிப்பாக இல்லை.
இதில் ரஜினியும் உண்டா என்கிறீர்கள். ரஜினியும், நானும் தமிழகத்தின் மேம்பாடு குறித்துதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதில் கொள்கை ரீதியாக மாறுதல் இருக்கலாம் என்று பரவலாக பேச்சு வருகிறது. ரஜினி சமீபத்தில் பேசியுள்ள விஷயங்கள் சற்றே மாறுபட்ட கண்ணோட்டத்துடன், தமிழகத்தின், தேசத்தின் நலன் நோக்கியதாக, அணி சாராத நிலையில் இருப்பதாக தெரிகிறது. அதனால், அவருடன் பேச்சு நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது. தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்றுதான் முன்பும் கூறியுள்ளோம்.
நல்ல எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். அதற்காக, நேர்மையை நோக்கி நகர துணியும் அனைவரும் ஒன்றுசேருவார்கள் என்று நம்புகிறோம். திமுக, அதிமுக இல்லாமல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பும் கட்டாயம் இருப்பதாகவே நினைக்கிறேன்.
இவ்வாறு கமல் கூறினார்.