டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர், உடமையிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், அங்கு நிலைமை சீரடைய அமைதி ஊர்வலம், அமைதிக் குழு அமைக்க அனுமதிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் மீதான தாக்குதல் குறித்து மனிதாபிமானத்தோடு தீர்வு காணவும், எதிர்க்கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தவும், அமைதிக் குழுக்கள் அமைக்கவும் அனுமதிக்க வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தின் விவரம்: ,
இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் தங்களைச் சந்தித்து டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, ஏறத்தாழ 37 பேர் மரணம், 200 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து எங்கள் கவலையையும், அக்கறையையும் தங்களுக்குத் தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம்.
ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டு, அவர்களுடைய உடைமைகள் எரிக்கப்பட்டு, அடிப்படை வாழ்வதாரத்தையே இழந்து நிற்கிறார்கள். இத்தகைய கொடுமை ஒரு ஆயுமேந்திய நாசகார கும்பல், அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தவர்கள் துணையுடன் நடத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்டிருக்கிறது.
ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை எங்களால் உங்களைச் சந்திக்க இயலாது என்று தகவல் செய்தி கிடைத்தவுடன், இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறோம்.
*டெல்லியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உரிய உத்தரவை, தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி துணைநிலை ஆளுநர் உட்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தி, உடனடியாக அங்கே சகஜ நிலை திரும்பிட உத்தரவிட வேண்டும். மேலும், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது உடனடியாகக் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
*வீடிழந்த மக்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பும், தங்கும் வசதிகளும் செய்து தந்து, அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்.
* இக்கலவரத்தில் மரணமடைந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
* வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
* அமைதியை ஏற்படுத்துவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, போராடுகிற மக்களை சமாதானப்படுத்துவதற்கும் அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு குழு அமைப்பதற்கு எங்களுக்கு அனுமதி தர வேண்டும்.
* இந்தப் போராட்டங்கள், பல பேருடைய உளப்பூர்வமான பாதிப்பை, குறிப்பாக குழந்தைகளுக்குப் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிற காரணத்தால், அவர்களுக்கென்று சிகிச்சை மையங்கள் அமைத்து, அக்குழந்தைகளின் அச்சத்தையும், அதிர்ச்சியையும் போக்கிட சிகிச்சை அளித்திட வேண்டும்.
மேற்சொன்ன இப்பிரச்சினைகளுக்கு மனிதாபிமானத்தோடு தீர்வு காணவும், எதிர்க்கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தவும், அமைதிக் குழுக்கள் அமைக்கவும் உடனடியாகத் தலையிட்டு, தொடர்புடைய அதிகாரிகள் அனுமதி அளித்திட உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பிரபுல் பட்டேல், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்குமார் ஜா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்.