குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சின்னபஜார் வீதியை சேர்ந்தவர் எஸ்.காத்தவராயன் (59). இவர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காத்தவராயன் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று கன்னிப்பேச்சு ஆற்றினார்.
இந்நிலையில், சளி, இருமல் பிரச்சினையால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று (பிப்.28) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காத்தவராயன் கடந்த 1980-ம் ஆண்டு முதல் திமுகவில் பணியாற்றி வந்தார். பேரணாம்பட்டு திமுக நகர, ஒன்றியம் மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதி என பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்தார். கடந்த 2011-16 வரை பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக இருந்தார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
நேற்று, சென்னை, திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தார். கடந்த இரு நாட்களில் திமுக எம்எல்ஏக்கள் 2 பேர் தொடர்ந்து உயிரிழந்தது அக்கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.