தமிழகம்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்; நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

செய்திப்பிரிவு

அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களையும் மத்திய பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன. வடகிழக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த நான்கு நாட்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருக்கிறது.

250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி டெல்லி போலீஸாருக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் உள்ளிட்ட அமர்வு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.

காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெறுப்பான பேச்சின் மூலம் வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தால் இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்க முடியும். இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் டெல்லி காவல்துறைதான் என்று நீதிபதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர்.

டெல்லியில் உள்ள ஷாகின் பாக்கில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிற பெண்கள் பங்கேற்கும் தொடர் போராட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியினர் தூண்டி விட்ட வன்முறைதான் இவ்வளவு உயிரிழப்புகளுக்கும் காரணமாகும். பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் பரவியதால் வன்முறை தலைவிரித்தாட ஆரம்பித்தது.

இதுகுறித்த வழக்கை நேற்று இரவு 12.30 மணிக்கு விசாரித்த நீதிபதிகள், டெல்லி போலீஸ் சார்பாக ஆஜரான துஷார் மேத்தாவிடம் கேட்டபோது, தான் அந்த வீடியோ காட்சியைப் பார்க்கவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழக்கறிஞராக உள்ள துஷார் மேத்தாவை நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். உங்களைப் போன்றவர்களின் பொறுப்பற்ற போக்குதான் தலைநகர் டெல்லியில் நடந்த கலவரத்தைத் தூண்டியதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்று கடுமையான கண்டனங்களை நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.

டெல்லி வன்முறை வெறியாட்டத்தை தடுக்கத் தவறிய காவல்துறை மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் இரவோடு இரவாக பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்திற்கு நேற்றே இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை எவரும் சகித்துக் கொள்ளவோ, பொறுத்துக் கொள்ளவோ முடியாத நிலையில்தான் நீதிபதி முரளிதர் தெரிவித்த காரணத்தால் மத்திய பாஜக அரசால் பழிவாங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியே பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசுகிற அளவுக்கு நீதிமன்றத்தின் தரம் தாழ்ந்து வருகிற நிலையில் இத்தகைய பழிவாங்கும் போக்கு நடைபெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மத்திய பாஜக அரசு, அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களையும் அச்சுறுத்தி வருகிறது.

தற்போது நீதிமன்றத்தை அச்சுறுத்தி, அச்சத்தில் ஆழ்த்தி வருகிற செயலில் ஈடுபட்டிருப்பதை விட ஜனநாயக, சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியக் குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கிற ஒரே அமைப்பாக இருக்கிற நீதிமன்றங்களும் மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணியின் அதிகார அத்துமீறலால் பலியாகி வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற செயற்குழுவில் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஜனநாயக வழியில், அமைதியாக பெருந்திரளாக போராடிக் கொண்டிருக்கிறவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு, 27 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா தான்.

எனவே, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. முதற்கட்டமாக டெல்லியில் நடந்த வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT