திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 57.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி.சாமி திடீரென்று மறைவெய்தினார் என்ற இதயத்தைக் கலங்க வைக்கும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவின் சுறுசுறுப்பு மிக்க தொண்டராகவும், கட்சி வளர்ச்சிப் பணிகளில் கள வீரராகவும் செயல்பட்ட கே.பி.பி.சாமி இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாநில மீனவர் அணி செயலாளர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த தலைவர் கருணாநிதியின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர்.
மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், மீனவர்களின் நலனே தன் தலையாய பணி என்ற உயரிய நோக்கில், அவர்களின் பிரச்சினைகளுக்காக முதல்வராக இருந்த கருணாநிதியிடமும், துணை முதல்வராக இருந்த என்னிடமும் வாதாடி பல நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உற்ற துணையாகவும், மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் இருந்தவர். திராவிட இயக்கக் கொள்கைகளை தன் நெஞ்சில் மீது ஏந்தி எப்போதும் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்த அவர், சட்டப்பேரவையில் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் என்றைக்கும் மறக்க இயலாதது.
இடையில் அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது, அவரை நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்திருக்கிறேன். அந்த நேரங்களில் தன் உடல்நலம் பற்றிக்கூட அக்கறை காட்டாமல், தனது தொகுதி மக்கள் குறித்தும், குறிப்பாக மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் என்னிடம் பேசுவார். அந்த அளவுக்குத் தொகுதி மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்திற்காவும் இரவு பகலாக பணியாற்றும் ஒரு செயல் வீரரை இந்தத் தொகுதி மக்கள் இழந்து வாடுகிறார்கள்.
திமுகவின் போராட்டங்களை முன்னின்று நடத்திடவும், உற்சாகமிக்க தொண்டர்களை உருவாக்கவும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து உழைத்து வந்த கே.பி.பி.சாமியை இழந்து நானும், திமுக தொண்டர்களும் தவிக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மீனவர் சமுதாய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’’ என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், மு.க.ஸ்டாலின் சென்னை, கே.வி.கே.குப்பத்தில் உள்ள கே.பி.பி.சாமியின் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.