கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு புதுப்பொலிவு பெற்றுள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கும் அழகிய கார்ட்டூன் சுவர் ஓவியங்கள் மட்டுமின்றி, இயற்கையான சூழல், பசுமையை நோக்கி செல்வோம் என்ற புதிய கருத்தோவியங்களும் இடம் பெற்றுள்ளன. 'சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன்' தொண்டர்கள், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் உட்பட 200 பேர் இணைந்து நேற்று (பி சுவர் ஓவியங்களை வரைந்தனர்.
உக்கடம் பேருந்து நிலையத்தில் 'கோவையின் வண்ணம்' என்ற கருத்தோவியங்கள் இடம் பெற்றன. இதைத்தொடர்ந்து, தற்போது 'வனம் 2.0' பதிப்பில், கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவ சிகிச்சைப் பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து 'சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன்' வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், "கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவில் சுமார் 5,000 சதுரடியில், மூன்று தளங்களில் நுாற்றுக்கணக்கானோர் இணைந்து இந்த வண்ணம் தீட்டும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, யுவா குழுவினர், ரத்த தான முகாம், இலவச உடைகள், பைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். மேலும், இந்த பிரிவில் உள்ள குழந்தைகள், பெற்றோர், கவனிப்பாளர்களுக்கு மற்றும் தேவையானோருக்கு உணவும் வழங்கினர். 'சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன்', சமுதாயத்திற்கு நலன் பயக்கும் பொறுப்புணர்வாக, ஒரு நல்ல சமுதாய காரணத்துக்கான தனது நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்த நிகழ்ச்சியை மேற்கொண்டது.
'சந்தின்ஸ் யுவா பவுண்டேஷன்' தலைவர் சசிக்கலா சத்தியமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், "குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த ஓவியங்கள், 300 – 400 குழந்தைகளை மகிழ்விப்பதோடு, அவர்களது நோயின் தாக்கத்தைக் குறைக்கும்" என்றார்.
கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில் கண்களை கவரும் வண்ணங்களாகவும், அதேசமயம், சமுதாயத்திற்கு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லும் விதமாகவும் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.